திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு; பூக்கள் விலை குறைவு

 

திருப்பூர், மே 20: திருப்பூர் மாநகரில் புஷ்பா பேருந்து நிறுத்தம் மற்றும் பழைய மார்க்கெட் வீதி என இரு இடங்களில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல், சேலம், நாமக்கல், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை பூ, சேலத்தில் இருந்து அரளி பூ விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூ விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வெயில் குறைந்து மழை பொழிவு தொடங்கியுள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. சித்திரை மாதம் சுபமுகூர்த்த நிகழ்வுகள் இல்லாததன் காரணமாக பூக்களின் வியாபாரம் அதிக அளவு இல்லாமல் இருந்தது. வைகாசி மாதம் தொடங்கியதால் முகூர்த்த நிகழ்வுகள் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூ வியாபாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஆனால் மழையின் காரணமாக வரத்த அதிகரித்திருப்பதால் விலை குறைந்து காணப்படுகிறது.

திருப்பூர் பழைய மார்க்கெட் வீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்றைய தினம் மல்லிகைப்பூ 320 ரூபாய், முல்லை பூ 160, அரளி 250 ரூபாய், சம்பங்கி 30 ரூபாய், செவ்வந்தி 240 ரூபாய், பெங்களூர் தக்காளி ரோஸ் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பூ வியாபாரி கூறுகையில், ‘‘வைகாசி தொடங்கியதும் நேற்று முன்தினம் காலை மல்லிகைப்பூ 800 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. ஆனால் அதற்கு அடுத்தபடியாக பூக்களின் வரத்து அதிகரித்ததால் விலை பாதிக்கு மேல் குறைந்தது. நேற்றைய தினம் 320 ரூபாய் வரை மட்டுமே மல்லிகைப்பூ விற்பனை செய்யப்பட்டது’’ என தெரிவித்தனர்.

The post திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு; பூக்கள் விலை குறைவு appeared first on Dinakaran.

Related Stories: