சென்னையில் நடந்த தேசிய அளவிலான போட்டிகள் ஓரல் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு 19 பதக்கம் கலெக்டர் பாராட்டு

நாகர்கோவில், பிப். 12: சென்னையில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர் 19 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர்.

சென்னையில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் காது கேளாதோருக்கான 6வது தேசிய அளவிலான ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் 23வது தேசிய சீனியர் காதுகேளாதோருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. தமிழக அணி சார்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர் 13 பேர் கலந்துகொண்டனர்.

இதில், 400 மீட்டர் ஓட்டம், தடை தாண்டி ஓடுதல், 200 மீட்டர் ஓட்டம், 600 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாணவ, மாணவியர் வினித், கவுரி, சுதன், கணேஷ், தனஞ்செயன், சூரியநாதன், பிபிஷா, லிஜோ, ஐஸ்வரியா, சச்சின் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.

 முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 10 பேர் மொத்தம் 19 பதக்கங்களை பெற்றனர். அவற்றை நாகர்கோவிலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேவிடம் காண்பித்து மாணவர்கள் வாழ்த்து பெற்றனர். பள்ளி தாளாளர் ராஜன் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு ஆகியோர் உடனிருந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் டானி ஷெரின் பாராட்டினார்.

Related Stories: