ஆத்தூர் அருகே பாதை, சுற்றுச்சுவர் வசதி இல்லாத விற்பனை கூடம்

ஆத்தூர், பிப்.8:  ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாதை வசதி மற்றும் சுற்றுச்சுவர் இல்லாததால் விவசாயிகள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில், தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு செல்ல பாதை வசதியில்லை. மேலும், சுற்றுச்சுவரும் கட்டப்படவில்லை. இதனால் விற்பனைக்காக பொருட்களை கொண்டு வரும் விவசாயிகளும், கொள்முதல் செய்த வரும் வியாபாரிகளும், பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், பெரிய அளவிலான ஒழுங்கு முறை விற்பனை கூடம் பயன்பாடின்றி உள்ளது. இதுகுறித்து விவசாயிகளும், வியாபாரிகளும் கூறியதாவது:ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு போதிய இடவசதியில்லாததால், அம்மம்பாளையம் சமத்துவபுரத்தின் அருகே அதிக பரப்பளவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டது. இந்த விற்பனை கூடத்திற்கு வரும் பாதையை, சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பாதை வசதியில்லை. மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கு சமத்துவபுரம் குடியிருப்புவாசிகள் அனுமதிக்காமல், வாகனங்களை சிறை பிடித்து பிரச்னை செய்கின்றனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வர முடியாத நிலை உள்ளது. மேலும், விற்பனை கூடத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இங்குள்ள களங்களை சிலர் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், விவசாயிகள் களங்களை பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இது குறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனியாவது இப்பிரச்னையில் தலையிட்டு, உடனடியாக பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: