கூட்டம் அதிகரிப்பால் படிக்கட்டில் பயணம் அரசு பேருந்தை இயக்க முடியாததால் திருப்புறம்பியத்தில் நிறுத்திய டிரைவர் மாணவர்கள் தவிப்பு

கும்பகோணம், பிப். 7: கூட்டம் அதிகரிப்பால் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிகள் பயணம் செய்ததால் இயக்க முடியாமல் திருப்புறம்பியத்தில் அரசு பேருந்தை டிரைவர் நிறுத்தினார். இதனால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் ஊராட்சியில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து கும்பகோணம் பகுதிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என 500க்கும் மேற்பட்ேடார் தினம்தோறும் சென்று வருகின்றனர். திருப்புறம்பியத்தில் இருந்து ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 8.15 மணிக்கு திருப்புறம்பியத்தில் இருந்து அரசு பேருந்து புறப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் முண்டியடித்து ஏறினர். இதனால் பேருந்து நிரம்பி வழிந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியவாறு பயணம் செய்தனர். இதனால் அரசு பேருந்து ஒருபுறமாக சாய்வது போல் இருந்தது. ஆபத்தை உணர்ந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு வந்த மாணவர்களிடம் உள்ளே ஏறுங்கள், இல்லையென்றால கீழே இறங்குகள் என்று டிரைவர், கண்டக்டர் கூறினர்.

அதற்கு கல்லூரி மாணவர்கள், எங்களுக்கு தேர்வு இருக்கிறது, இந்த பேருந்தை விட்டால் நாங்கள் தேர்வுக்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பேருந்தை இயக்க முடியாது என்று திருப்புறம்பியம் பாலக்கரையில் பேருந்தை டிரைவர் நிறுத்தினார். மாணவர்கள் தேர்வுக்கு நேரமானதால்  சாலையில் சென்ற வாகனத்தில் லிப்ட் கேட்டு கல்லூரிக்கு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் 30 நிமிடம் தாமதமாக பேருந்து டிரைவர் இயக்கி சென்றார். .எனவே திருப்புறம்பியம் கிராமத்தில் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்தை இயக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: