அம்பை வண்டி மலைச்சியம்மன் கோயில் கொடை விழா

அம்பை, பிப். 7:  அம்பை வண்டி மலைச்சியம்மன்- இலங்கத்தம்மன் கோயில் கொடை விழாவில் கரக குடம் ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாேனார் பங்கேற்றனர். அம்பை - பாபநாசம் பிரதான சாலை சந்தை பஜாரில் நூற்றாண்டுகளை கடந்த பிரசித்தி பெற்ற வண்டிமலைச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயிலின் கொடை விழா கடந்த ஜன.30ம் தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள், கோயிலில் இருந்து புறப்பட்டு வெளிநின்ற அம்மன் கோயில் வந்தனர். அங்கிருந்து சூலம் பெற்று ரயில்வே பாலம் அருகே உள்ள தாமிரபரணி நதியில் புனித நீராடி அம்பாளுக்கு பூஜைகள் செய்து புனிதநீர் கரக குடம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஆற்றுச்சாலை, மேலப்பாளையம் தெரு, பிரதான சாலை, அகஸ்தியர் கோயில் வழியாக கோயிலை ஊர்வலம் வந்தடைந்தது. இதையடுத்து அம்பாளுக்கு மாலை 6.30 மணிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.  இதில் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு நடந்த சிறப்பு தீபாராதனையை அடுத்து கரக குடம் ஊர் சுற்றி வரும் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவில்   சாமக்கொடை நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு படையல் தீபாராதனை நடந்தது.

Related Stories: