ஊத்துக்கோட்டை, பிப்.5: ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் சேதமடைந்த சுற்றுச்சுவரை போலீசார் தாங்களாக முன்வந்து சீரமைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி, போந்தவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம், பிளேஸ்பாளையம் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
கடந்த 1954ல் துவங்கப்பட்ட இப்பள்ளிக்கு அப்போது போதிய வகுப்பறைகள் இல்லாத போது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1958 - 59ம் ஆண்டு இன்பக்கனவு, சுமைதாங்கி என்ற 2 நாடகங்களை நடத்தி அதில் வந்த பணத்தில் 4 வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார் என்ற பெருமையும் இப்பள்ளிக்கு உண்டு. இப்பள்ளியில், சுமார் 60 ஆண்டுகள் கடந்த இப்பள்ளியின் பழைய வகுப்பறை கட்டிடங்கள் அகற்றப்பட்டு, தற்போது புதிதாக 40 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், பள்ளியின் நுழைவு வாயில் பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சுவரின் வெளிப்பகுதியில் செல்லும் கழிவு நீர் கால்வாய் மூடாமலும் கிடந்தது. இது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.