குற்றச்செயல் தடுக்க வார்டுக்கு ஒரு போலீசாரை நியமிக்க முடிவு

திருப்பூர், ஜன. 22:  திருப்பூர் ஸ்ரீ விநாயகர் அறக்கட்டளை சார்பில், அனுப்பர்பாளையம் திலகர் நகர் மேற்கு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணை தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் கோபால்சாமி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் கலந்து கொண்டு பேசியதாவது: காவல் துறையினரின் முக்கிய பொறுப்பு மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது தான். இதற்கு பொதுமக்களும், போலீசாருக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். சிலர் பொருட்கள் விற்பது போல் வந்து திருடுவதற்காக நோட்டம் விடுகின்றனர்.

இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு கொள்வதற்காக ஏற்கனவே வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டுகளில், வார்டுக்கு ஒருவர் என ஒரு போலீசார் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதை அனைத்து வார்டுகளிலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கியமான தெருக்களில், கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டால் குற்றவாளிகளை கண்டறிவது எளிதாகும். இதனால், குற்றம் நடக்காமல் தடுக்க முடியும். ஒரு கண்காணிப்பு கேமரா 10 போலீசாருக்கு சமம்.

அதேபோல் ஏதாவது ஒரு இடத்தில் குற்ற சம்பவங்கள் நடந்தால்,  உடனடியாக போலீசாருக்கு 100 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவார்கள். மேலும் சந்தேகம் படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால், உரிய அடையாளங்களோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும். ஆகவே, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் பேசினார். இதில் துணை கமிஷனர் உமா, வடக்கு உதவி கமிஷனர் அண்ணாதுரை, அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, அறக்கட்டளை நிர்வாகிகள் லோகநாதன், தினகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: