அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு

தஞ்சை, ஜன. 22:  தஞ்சை மாவட்டத்தில் சம்பா அறுவடை தீவிரம் அடைந்துள்ளதால் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்ய வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.அன்னப்பன்பேட்டை விவசாய அணி தலைவர் செல்வராஜ் அளித்த கோரிக்கை மனுவில், அன்னப்பன்பேட்டையில் தமிழ்நாடு நெல் கொள்முதல் நிலையத்துக்கு சொந்த கட்டிடம் உள்ளது. ஆனால் அங்கு நெல் கொள்முதல் நடைபெறவில்லை. தற்போது சம்பா அறுவடை துவங்கியுள்ள நிலையில் கொள்முதல் நிலையம் செயல்படாததால் தனியார் வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு நெல்லை விலை பேசுகின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் போதிய எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யுங்கள்: காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் அம்மையகரம் ரவிச்சந்தர் அளித்த மனு: தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளது. இந்நிலையில் தனியார் கதிர் அறுக்கும் இயந்திர உரிமையாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,900 வசூல் செய்கின்றனர். வழக்கமாக நடக்கும் அரசின் முத்தரப்பு கூட்டம் இந்தாண்டு நடத்தப்படவில்லை. இதனால் கட்டண நிர்ணயம் செய்யப்படாததால் விவசாயிகளிடம் இருந்து இஷ்டத்துக்கு கதிர் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். எனவே உடனடியாக விவசாயிகள், அதிகாரிகள், தனியார் கதிர் அறுக்கும் இயந்திர உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை கூட்டி மாவட்டம் முழுவதும் ஒரே வாடகை தொகையை நிர்ணயித்து பெற வேண்டும். மேலும் கூடுதலாக அரசு சார்பில் கதிர் அறுக்கும் இயந்திரத்தை பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ெபாங்கல் பரிசு ெதாகுப்பு வழங்க வேண்டும்:  திருவையாறு தாலுகா பெரும்புலியூரை சேர்ந்த ஜெயராமன் அளித்த மனுவில், பொங்கல் திருநாளுக்கு அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 பொங்கலுக்கு பிறகும் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வழங்கவில்லை. எனவே உடனடியாக பொங்கல் பரிசுத்தொகை பெறாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை இயங்கவில்லை:  பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் அளித்த மனுவில், கஜா புயலால் பாதித்த தம்பிக்கோட்டை சுந்தரம், வடகாடு ஆகிய கிராமங்களில் பல குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பிக்கோட்டையில் இயங்கி வந்த அரசு மருத்துவமனை கடந்த ஓராண்டாக மூடி கிடக்கிறது. 10,000 பேர் வசிக்கக்கூடிய தம்பிக்கோட்டை சுற்றுவட்டாரத்தில்  மீண்டும் அரசு மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நெல் கொள்முதல்  நிலையத்தில் முறைகேடு

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கக்கரை சுகுமாரன் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் போதியளவில் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது செயல்படுகிற நெல் கொள்முதல் நிலையங்களிலும் பணமாக இல்லாமல் நெல்லாக வசூல் செய்கின்றனர். 40 கிலோ மூட்டை நெல்லுக்கு கூடுதலாக 4 கிலோ சேர்த்து எடுத்து கொள்கின்றனர். 4 கிலோ நெல்லின் மதிப்பு ரூ.40 ஆகும். இதன் மூலம் மூட்டைக்கு ரூ.40 கட்டாயமாக வசூல் செய்கின்றனர். இந்த முறைகேடுகளை உடனடியாக களைய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: