ஜெயங்கொண்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் எஸ்.பி ஆய்வு

ஜெயங்கொண்டம், ஜன.22: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை எஸ்.பி ஆய்வு செய்தார். ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு வரும் இடங்களை அரியலூர் எஸ்.பி சீனிவாசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடந்த சில மாதங்களாக ஜெயங்கொண்டம் கடைவீதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் எஸ்.பி சாலையை பார்வையிட்டு கடை உரிமையாளர்களிடம் கடை முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள உத்தரவிட்டிருந்தார். சில நாட்கள் பின்னர் உரிமையாளர்கள் சிலர் தங்கள் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி உதவியுடன் நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று எஸ்பி சீனிவாசன் ஆய்வு செய்து பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி போக்குவரத்தை சரி செய்ய உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்புகள் எடுக்காமல் இருப்பவர் மீது நடிவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.பின்னர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் நேரில் சந்தித்து போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை இயக்கவும், வாகனங்களை கடைவீதிகளில் உள்ள சாலையில் ஓரமாக நிறுத்தவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மீண்டும் கடைக்காரர்கள் ஆக்கிரமிக்க கூடாது எனவும். அவ்வாறு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யும் கடை மற்றும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். ஆய்வின்போது ஜெயங்கொண்டம் டிஎஸ்பி (பொ) சங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், வசந்த் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: