கேளம்பாக்கத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்போரூர், ஜன.11:  சென்னைப் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்திற்கு உயர்நீதிமன்றம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி  இப்பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், மென்பொருள் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் வசிப்பவர்கள், பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் கேளம்பாக்கம் மற்றும்  அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

மேலும், சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், கோவளம், திருப்போரூர் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் கேளம்பாக்கம் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்,  கார், பஸ், தனியார் வேன்கள், ஷேர் ஆட்டோ என கேளம்பாக்கம் பிரதான சாலை எப்போதும் நெரிசலாக  உள்ளது. இதைத் தொடர்ந்து வண்டலூர் சந்திப்பு மற்றும் கோவளம் சந்திப்பு ஆகிய இரு இடங்களில் சிக்னல்  அமைக்கப்பட்டது. மேலும் கோவளம் சந்திப்பில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. மற்றும் 4 போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல்  குறைந்தது.

இந்நிலையில் இங்கு பணிபுரிந்த போக்குவரத்து பிரிவு போலீசார் அனைவரும் மாமல்லபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். மேலும் கோவளம் சந்திப்பில் இருந்த சிக்னல் இயக்கம் நிறுத்தப்பட்டு ஒரு வழிப்பாதையாக  மாற்றப்பட்டு விட்டது. வண்டலூர் சந்திப்பில் மட்டும் தானியங்கி சிக்னல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.சட்டம் ஒழுங்கு போலீசார் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது போக்குவரத்தை  ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போதிய போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமல் தங்களின் விருப்பம்போல் வாகனங்களை குறுக்கும் நெடுக்குமாக ஒட்டிச் செல்கின்றனர். இதனால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பழைய மாமல்லபுரம் சாலையின் இரு பக்கங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதிலும், குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரி,  வேலைக்கு செல்வோரும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும், கோவளம் சந்திப்பில் போலீஸ் பூத் செயல்படவில்லை. கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் போக்குவரத்துக்கென்று தனி பிரிவை உருவாக்கி  போலீசாரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: