கடனாநதி அணைப்பகுதியில் குட்டியுடன் யானைகள் உலா

கடையம், ஜன. 11:  கடையம் கடனா நதி அணைப்பகுதியில் குட்டியுடன் 4 யானைகள் உலா வருகின்றன.  கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி அணை உள்ளது. இந்த அணை மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் கடனா நதி அணை விளங்குகிறது. அணை பாதுகாப்பு பணியில் உதவி பொறியாளர் உள்பட 5 பேர் ஈடுபட்டு வருகின்றனர். கடனா நதி அணையை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற அத்ரிமலை கோரக்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகாமலிருக்க மலையடிவாரத்தில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் வலம் வந்த 4 யானைகள், அணை அலுவலகம் அருகே பலத்த சத்தத்துடன் பிளிறியது. யானைகள் பிளிறலை கேட்ட அணை பாதுகாப்பு ஊழியர்கள் பீதியடைந்தனர். மலையடிவாரத்தில் உள்ள அழகப்பபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராம மக்கள், இரவு நேரங்களில் வயலுக்கு காவல் சென்ற விவசாயிகளும் யானைகள் பிளிறலால் அச்சமடைந்து இருக்கின்றனர். தகவலறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் கொம்மு ஓம்கார உத்தரவுப்படி கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறையினர் கடனா அணைப் பகுதியில் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கடந்த சில நாட்களாக கடனா அணை அலுவலகம் அருகே, அடிக்கடி யானைகள் கூட்டமாக வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் யானைகளின் வழிப்பாதைகள் கண்காணிக்கப்பட்டு சூழ்நிலையை பொறுத்து பட்டாசு வெடித்தும், டப்பாக்களை கொட்டியும் விரட்டும் பணி நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சோலார் மின்வேலி சீராக செயல்படுவதால் யானைகள் காட்டை விட்டு வெளியே வர முடியாது. யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: