குவாரியை தடை செய்ய கோரி பெண்கள் குத்துவிளக்கு பூஜை

அரியலூர், ஜன.9: திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை தடை செய்யக்கோரி மாரியம்மன் கோயிலில் பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.  அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியால் விவசாயம் பாழடைந்து போகிறது. ஏற்கனவே இருபது ஆண்டுகளாக இப்பகுதி கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த அரசு மற்றும் தனியார் மணல் குவாரியினால், அதிக ஆழத்தில் மணல் தோண்டி எடுக்கப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே போய்விட்டது.

மேலும் எட்டு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும்  திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டியும், திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே மணல் குவாரி இயங்கிய இடத்தில், தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்கு ராட்சத போர் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல இருக்கும் அரசின் முடிவை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். திருமானூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மகா மாரியம்மன் கோயிலில்   கொள்ளிடநீர் ஆதார பாதுகாப்புகுழு சார்பில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி மாரியம்மாள் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த குத்துவிளக்கு பூஜையில் திரளான மகளிர் மற்றும் கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் தனபால், கைலாசம், பாளை.திரநாவுகரசு மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: