மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில்சொக்கநாத சுவாமி நகையை சரிபார்க்க உத்தரவு

மயிலாடுதுறை, ஜன.8:  மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் சொக்கநாத சுவாமி நகையை சரிபார்க்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரத்தில் தருமபுர ஆதீனம் செயல்பட்டு வருகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் குருஞானசம்பந்தரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த ஆதீனத்தில் 26வது குருமகாசன்னிதானமாக உள்ளவர் சண்முக தேசிகஞான சம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள். ஆதீனத்திற்கு 93 வயதாகிறது, வயது மூப்பால் உடல்நிலை குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த சாமிகளை இளைய ஆதீனமாக நியமித்துள்ளார். தருமபுர ஆதீன மடத்திலேயே எழுந்தருளியுள்ள சொக்கநாதர்தான் குரு தருமபுரஆதீனத்திற்கு சொக்கநாதர் வெண்பாதான் குருமரபு. அந்த சொக்கநாதர் சுவாமிக்கு 158 பவுன் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாலையை 25வது குருமகா சன்னிதானம் அணிவித்திருந்தார். கடந்த வாரம் சண்முகதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சொக்கநாதரை தரிசிக்க சென்றபோது, சொக்கநாதர் கழுத்தில் அணிந்திருந்த காசுமாலையில் குறைவு ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறைக்கோ இந்து அறநிலையத்துறைக்கோ தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இத்தகவல் சீர்காழியை சேர்ந்த திருக்கோயில் பாதுகாப்பு பேரவை பாலசுப்ரமணியனுக்கு தகவல் கிடைத்ததால், மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் பெறும் உரிமையின்கீழ் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அம்மனுவில் 158 பவுனில் 120 பவுன் காணாமல் போயுள்ளது குறித்த கேள்வியுடன், மேலும் பல கேள்விகளைக் கேட்டிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவையின் மாநில செயலாளர் அழகிரி தமிழக இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 27 கோயில்களின் நகைகள் அனைத்தையும் சரிபார்க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமாரிடம் கேட்டபோது, சொக்கநாதர் அணிந்திருக்கும் நகை போட்டோவுடன் இந்து அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு அதிகாரிகளை அனுப்பி ஆதீனத்தில் சம்பந்தப்பட்ட நகையை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது, அவர் சரிபார்த்து வந்து தகவல் தெரிவித்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Stories: