முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் கோயில் மணி ஓசை கேட்டு மக்கள் திரண்டதால் பரபரப்பு

முத்துப்பேட்டை, ஜன:3: முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில தினங்களாக சுகாதார துறை மூலம் மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதனை உட்கொண்ட பேட்டை கிராம பகுதியை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கடந்த 29ம் தேதி இரவு முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிய சென்ற பாஜக திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டை சிவா மற்றும் பேட்டை கிராமத்தினருக்கும் அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் அரவிந்த் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரசு மருத்துவர் அரவிந்தை பேட்டை சிவாவுடன் வந்த அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறி பேட்டை சிவா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனைதொடர்ந்து நேற்று முன்தினம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டை கிராம மக்கள் திரண்டு சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்தனர். இதனால் முத்துப்பேட்டையல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவர் மீது கொடுத்த புகாருக்கு மனு ரசீது தர வலியுறுத்தியும்  பேட்டை சிவாவை கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும்  பேட்டை கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் இரவு பேட்டை சிவன் கோயில் மணியை அடித்து கிராமத்தை கூட்டினர். அப்போது அரசு மருத்துவதுறையை கண்டித்தும், கைது செய்த பாஜக மாவட்ட தலைவரை விடுவிக்க கோரியும் பேட்டை சிவன் கோயில் முன் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு மருத்துவரை கைது செய்யவேண்டும் என்று போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் டிஎஸ்பி இனிகோ திவ்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போராட்டத்தை தோடர்ந்த மக்கள் போலீசாரின் தொடர்ந்து பேச்சுவார்த்தையால் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு போராட்டத்தை முடித்துக்கொண்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: