18வது நாளாக தொடரும் வி.ஏ.ஓக்கள் போராட்டம்

திருவள்ளூர், டிச. 28: விஏஓ அலுவலகங்களில் முறையான மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி செய்து தரக்கோரியும், பட்டா மாறுதல் விஷயங்களில் வி.ஏ.ஓக்களுக்கு முழு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி முதல் தமிழ்நாடு விஏஓக்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டா, பட்டா பெயர் மாற்றம், வருமானம், ஜாதி, இருப்பிடம், வாரிசு என்று பல்வேறு சான்றுகளையும் கேட்டு, ஆன்லைனில் விண்ணப்பித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சான்றுகள் பெற முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

மேலும், பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகளை பயனாளிகளுக்கு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்றும் 18வது நாளாக பூந்தமல்லி தாலுக்கா அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் பிரகாஷ்பாலாஜி தலைமையில் வட்ட நிர்வாகிகள் ஏ.மகேஷ்குமார், முருகானந்தம், புருஷோத்தமன் மற்றும் விஏஓக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து வட்ட செயலர் மகேஷ்குமார் கூறுகையில், ‘‘நாங்கள் விஏஓ அலுவலகத்துக்கு அடிப்படை வசதிகளைத்தான் கேட்கிறோம். எங்களுக்கு சம்பள உயர்வை கேட்கவில்லை. 18 நாட்களாக போராட்டம் நடத்தியும், இந்த அடிப்படை வசதிகளை செய்து தர அரசு முன்வரவில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’ என்றார்.

Related Stories: