புத்துணர்வு முகாமுக்கு செல்லாத கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்துக்கு ஊட்டச்சத்து மருந்து

கும்பகோணம், டிச. 25: தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் நலவாழ்வு முகாம், கடந்த 2003 முதல் நடத்தப்படுகிறது.2019ம் ஆண்டுக்கான புத்துணர்வு முகாம் கடந்த 14ம் தேதி கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்திரகாளி அம்மன் கோயிலுக்கு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் பவானி ஆற்றுப்படுகையில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில்  பிப்ரவரி 2ம் தேதி வரை  48 நாட்கள்  நடக்கிறது.கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள மங்களம் யானைக்கு சளி பிரச்னையால் கடந்த 6 ஆண்டுகளாக முதுமலைக்கு செல்லாமல் கோயிலிலேயே வைத்து பல்வேறு சிகிச்சைகள், உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள் வழங்கி பராமரித்து வந்தனர். இந்நிலையில் இந்தாண்டும் முகாமுக்கு செல்லாததால் நேற்று யானைகள் முகாமில் இருந்து மங்களம் யானைக்கு லேகியங்கள், மாத்திரைகள், ஊட்டச்சத்து மருந்துகள், சூரணங்கள், கொள்ளு, பயிறு, கேழ்வரகு, அரிசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை 48 நாட்களுக்கு வழங்கியும், மங்களத்தை நடைபயிற்சி அழைத்து செல்ல வேண்டுமென யானைகள் முகாம் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.அதன்படி நேற்று முதல்  கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் யானை பாகன் ராஜ்குமார், மருந்துகள், ஊட்டச்சத்து மாத்திரைகள், லேகியங்களை வழங்கி நடைபயிற்சிக்காக கோயில் உள்பிரகாரம் மற்றும் தேரோடும் வீதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு அழைத்து சென்று தீவிரமான கண்காணிப்பில் பயிற்சியளித்து வருகிறார்.

Related Stories: