கறம்பகுடியில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.82 ஆயிரம் கொள்ளை

கறம்பக்குடி, டிச.20:   கறம்பகுடி திருவோணம் சாலை செட்டித்தெருவில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை சாத்தி விட்டுச்சென்றனர். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கறம்பக்குடி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கல்லாவில் இருந்த ரூ.40 ஆயிரம் திருடு போனதை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். அதேபோல் அருகே விவசாய உபகரண கடையில் பூட்டை உடைத்து சட்டரை திறந்து கல்லாவில் இருந்த ரு.40 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் இந்த 2 கடைகளின் எதிரே உள்ள அரிசி கடையில் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.2 ஆயிரமும் திருடு போயிருந்தது. தொடர்ந்து அருகிலிருந்த பெட்டிக்கடையிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அடுத்தடுத்து கடைகளில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

5 பேர் மீது போலீசார் வழக்கு:  கறம்பகுடியில் அரசு மருத்துவமனைக்கு பூட்டு போட்ட தன் எதிரொலியாக 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 கறம்பகுடி தாலுகா கரு,கீழத்தெரு ஊராட்சி மஞ்சிக்காடு கிராமத்தை சேர்ந்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பு அரசின் நிவாரணப்பொருட்களை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்டு அப்பகுதி மக்கள் 2 தினங்கள் கழித்து நிவாரண பொருட்களில் இருந்த பால் பவுடரை பிரித்து சாப்பிட்டுள்ளனர். இதில் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இரவு நேரத்தில் அங்கு டாக்டர் பணிக்கு வராததால் உறவினர்கள் மறியல் போராட்டம் மற்றும் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக பூட்டு போட்டும் அவதூறாக பேசியதாகவும் டாக்டர் மற்றும் செவிலியர்களை பணி செய்யவிடாமல் சிலர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் மரியா கொடுத்த புகாரின் பேரில்  உடையப்பன், பொன்னுச்சாமி, துரைச்சந்திரன், பிரகாஷ், பாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீதும் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: