மணப்பாறை பகுதியில் புயல் தாக்குதல் கரும்பு விளைச்சல் கடும் பாதிப்பு: பொங்கலுக்கு விலை உயருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மணப்பாறை, டிச.19:   மணப்பாறை பகுதிகளில் கஜா புயலால் கரும்பு விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு கரும்பு விலை உயருமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. ஆனால், இந்த வருடம் பருவ மழையை நம்பி இப்பகுதி விவசாயிகள் ஆர்வமாக கரும்பு பயிரிட்டிருந்த நிலையில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் கடந்த மாதம் தமிழகத்தை புரட்டிப் போட்ட கஜா புயல் திருச்சி மாவட்ட பகுதிகளான மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் கரும்பு பயிர்களும் பாதிக்கப்பட்டன. இதனால் வருகின்ற பொங்கலுக்கு குறைந்த அளவே கரும்புகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு கரும்பு விலை உயருமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். மேலும் தமிழக அரசு கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசை வலியுறுத்துகின்றனர்.

Related Stories: