வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

மதுரை, டிச. 19: வைகுண்ட ஏகாதசியையொட்டி மதுரை பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 8ம்தேதி முதல் சுவாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தை தினமும்  வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோயில் மண்டபத்தில்  பெருமாள் முன் நாயன்மார்கள் இயற்றிய பாசுரங்கள் பாடப்பட்து.

வைகுண்ட ஏகாதசியான நேற்று நேற்று அதிகாலை 5.30 மணிக்கு  சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதையொட்டி பிரசன்ன வெங்கடாசபதி பெருமாள் மங்களவாத்தியங்களுடன் பரமபத வாசலில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா எனும் கோஷம் முழங்கிட தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெருமாள் கோயிலை வலம் வந்தும், பிறகு சயன கோல அரங்காரம் கண்டருளியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

*அழகர்கோயிலில் நேற்று காலை பக்தர்கள் புடைசூழ பரமபத வாசல் வழியாக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.

*கூடலழகர் பெருமாள் கோயிலில் நேற்றிரவு 7.15 மணியளவில் சொர்க்கவாசல்  திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து, கோயிலுக்குள் சென்ற பெருமாளுக்கு இரவு 7.30 மணியளவில்  நம்மாழ்வார் மங்களாசாசனமும், இரவு 8 மணியளவில் திருவாராதனமும் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்பு சொர்க்கவாசல்  வழியாக வெளியே வந்தனர். நேற்று முதல் 7 நாளைக்கு சொர்க்கவாசல்  மாலையில் திறக்கப்படும்.

*திருமோகூர் காளமேகப் பெருமாள்  கோயிலில் நேற்றிரவு 7 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து நம்மாழ்வார் மங்களாசாசனமும், திருவாய்மொழி தொடக்கமும் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல்  வழியாக வெளியே வந்தனர்.

*சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள்  கோயிலில் காலை 5.40 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி,  பூதேவி சமேதமாக ஜெனக நாராயண பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியேறி  காட்சியளித்தனர். ஆழ்வார்கள் ராமானுஜர், வேதாந்த் தேசிகர், திருமங்கை  ஆகியோர் பாசுரங்களுடன் வரவேற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  கோவிந்தா கோஷமிட்டு வழிபட்டனர். ரகுராம் பட்டர், வரதராஜ பண்டிட் சிறப்பு  பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மாலையில் கருட  வாகனத்தில் நான்கு ரதவீதிகளில் சுவாமிகளின் வீதியுலா நடந்தது.

*டி.கல்லுபட்டி நல்லமரம் கொட்டாணிபட்டியில் கேட்ட வரம் தரும் வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கும்ப, கலச, கேமாதா உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பால், பழம், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி அவதாரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: