சிறப்பு காவல்படை கபடி அணி வெற்றி முதலமைச்சர் கோப்பை மாவட்ட போட்டி நிறைவு: செஸ் போட்டியில் அரசு ஊழியர்கள் அசத்தல்

மதுரை, செப்.26: மதுரையில் நடந்த மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றது. மதுரை மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி கடந்த செப்.10ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் பள்ளி, கல்லூரி, மாணவர்கள், பொதுப்பிரிவினர்களுக்கான போட்டிகள் முதற்கட்டமாக முடிவுக்கு வந்தது. மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர் பிரிவினருக்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் 100மீ., ஓட்டத்தில் தினேஷ், அமுல்யாஈஸ்வரி, ஜெகதீஷ், துர்காதேவி, முத்துராஜா, அங்காளஈஸ்வரி, தினேஷ், அபர்ணா ஆகியோர் முதலிடம் பெற்றனர். அதே போல குண்டு எறிதலில் வருண், யானவதி, சங்கர், சத்தியா, பியாஸ்பானு, அருண்பாண்டி, ஜெனிபர், அழகுஈஸ்வரி, விஷ்வா போன்றோர் முதலிடம் பிடித்தனர். இதன் வாயிலாக இவர்கள் அனைவரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கான ஆண்கள், பெண்கள் செஸ் போட்டிகளில் ராஜ்குமார், ஆனந்தி முதலிடம் பெற்றனர். ஆண்கள் கபடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணி முதலிடமும், ஆயுதப்படை போலீசார் 2ம் இடமும் பிடித்தனர். இதில் தீயணைப்புத்துறை மூன்றாம் இடம் பெற்றது. இப்போட்டியின் நிறைவு விழாவில் இந்திய வழக்கறிஞர் சங்க செயலர் சாமிதுரை தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பாலகுமாரசாமி, விளையாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிக்கான தடகள பயிற்சியாளர்கள் ரஞ்சித்குமார் மற்றும் தீபா, பயிற்சியாளர்கள் குமரேசன், ஜோதிபாசு, அரவிந்த், ராமதாஸ், முத்துலிங்கம், கருணாகரன், ஜெகஜோதி, சேந்தன் பழனிச்சாமி ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.

The post சிறப்பு காவல்படை கபடி அணி வெற்றி முதலமைச்சர் கோப்பை மாவட்ட போட்டி நிறைவு: செஸ் போட்டியில் அரசு ஊழியர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: