திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ‘டியூட்டி டிரா பேக்’ அதிகரிக்க வேண்டும்

திருப்பூர், டிச.11: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், டியூட்டி டிரா பேக் தொகையை 4.5 சதவீதம் அதிகரித்து தரவேண்டும் என பிரதமர் மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜாசண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்க கடந்த சில ஆண்டுகளாக பருத்தி, நுால் விலையேற்றம், துணிகளுக்கு சாயமிடுதல், நிட்டிங், பிரிண்டிங், பிளிச்சிங், அட்டை பெட்டி, எலாஸ்டிக் ஆகிய பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் சம்பள உயர்வு, மின்கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஆடை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் பின்னலாடை நிறுவனங்களுக்கு டியூட்டி டிராபேக் 14 சதவீதம் வழங்கப்பட்டது. இது படிப்படியாக  குறைந்து தற்போது 2 சதவீதமாக உள்ளது. இந்த அறிவிப்பு பின்னலாடை துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னலாடை  வர்த்தக சந்தையில் ஆடைகளின் விலைகள் குறைந்து வரும் நிலையில் இந்திய பின்னலாடை நிறுவனங்கள் கடும் போட்டிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கி வந்த சலுகைகளான டியூட்டி டிராபேக் 4.5 சதவீதமும், ஆர்ஒஎஸ்எல் ஆகியவற்றை அதிகரித்து தர பிரதமர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: