கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு வேலைகேட்டு இளைஞர் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம், டிச.11: காஞ்சிபுரத்தை அடுத்த வாரணவாசியைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவரின் மனைவி யமுனா (30). மகள் அனுசுயா 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். செல்வத்தின் அப்பா ராஜாராமன் கிராம உதவியாளராக (தலையாரி) இருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது

இந்நிலையில் நேற்று  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு செல்வம் மற்றும் அவரது மனைவி யமுனா வந்தனர்.  குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் மக்கள் நல்லுறவு மையக் கட்டிடம் முன்புவந்த செல்வம் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கொண்டுவந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.  இதைக் கண்டதும் அருகில் இருந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஓடிவந்து அவர் கையில் இருந்த தீப்பெட்டியைப் பிடுங்கினார்கள். பின்பு அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றினார்கள்.

 தகவல் அறிந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும்  மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது கலெக்டரிடம், என் அப்பா கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். எனவே,. எனக்கு அரசு வேலை கேட்டு 2016ம் ஆண்டு வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம் ஆர்டிஓ அலுவலகத்தில் மனுகொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நான் கூலித் தொழில் செய்து வருகிறேன். போதிய வருமானம் இல்லாமல் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருகிறேன். எனவே, என் வீட்டுக்கு வந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர், தகுதி இருந்தால் மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும். மேலும் உங்களுக்கு வயது 36 ஆகிவிட்டது. அரசு விதிகளுக்கு உட்பட்டே வேலை வழங்க முடியும். தகுதி, முன்னுரிமைப் பட்டியலில் பல பேர்  உங்களுக்கு முன்பு இருக்கும்போது உங்களுக்கு வேலை கொடுத்தால் படித்து முடித்து வேலைக்குக் காத்திருக்கும் பலபேர் பாதிக்கப்படுவார்கள் என விளக்கிக் கூறினார். மேலும் உங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார், இளைஞர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று காலை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: