திருக்காட்டுப்பள்ளி, டிச. 6: பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள சாலையை கால்நடைகள் ஆக்கிரமித்துள்ளதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிமக்கள் தஞ்சை, திருச்சி, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்காக பூதலூர் வழியாக செங்கிப்பட்டிக்கு இருவழி தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் பூதலூர் நால்ரோடு, ரயில்வே மேம்பாலம், வில்வராயன்பட்டி பகுதிகளில் தினம்ேதாறும் 20க்கும் மேற்பட்ட மாடுகள், கன்று குட்டிகள் சாலையிலேயே தஞ்சமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் கால்நடைகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைப்பதுடன் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.