மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கண்டித்து மோடி உருவ பொம்மை எரிப்பு விவசாய சங்கம் போராட்டம் திருச்சி காவிரி பாலத்தில் பரபரப்பு

திருச்சி, டிச.4: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை தலைமையில் விவசாயிகள் கருப்பு கொடியுடன் நேற்று காவிரி ஆற்று பாலத்தில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் பிரதமர் மோடி உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையில் விரைந்து சென்ற போலீசார் விவசாயி சின்னதுரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதுகுறித்து விவசாயி சின்னதுரை கூறுகையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் பாசன நிலப்பரப்புகள் பாலைவனமாகும். 21 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரங்களை அழித்து ஒட்டு மொத்த தமிழகத்தை அழிக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. அதனால் மோடி உருவ பொம் மையை எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இதனையும் கையில் எடுத்து போராட வில்லை என்றால் தமிழகம் சென்னையில் இருந்து ராமநாதபுரம், நாகை வரையிலும் பாலைவனமாக மாறிவிடும் என்றார்.

Related Stories: