ஊத்துக்கோட்டை, நவ. 30: ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர், மாமண்டூர், ஆவாஜி பேட்டை, கல்பட்டு, மெய்யூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரி, வேலை சம்மந்தமாக வெங்கல் - சீத்தஞ்சேரி சாலையை பயன்படுத்தி வெங்கல், சீத்தஞ்சேரி பகுதிகளுக்கு சென்று, அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், கோயம்பேடு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலை வெங்கல் முதல் ஆவாஜி பேட்டை வரை சுமார் 4 கி.மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக, சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால், பைக்கில் செல்பவர்கள் சாலை பள்ளத்தில் விழுந்து விபத்துகள் அதிகரித்து வந்தது. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.