பவானி அரசு மருத்துவமனையில் புறநோயாளி எண்ணிக்கை குறைந்தது

பவானி, நவ. 27:  பவானி அரசு மருத்துவமனையில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் மருத்துவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.  பருவகால மாற்றம், தொடர் மழை காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அதிக அளவில் நோயாளிகள் குவிந்தனர். கடந்த 2 வாரங்களாக பவானி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

 மேலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகளால் கோவை பகுதியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயளிகள் எண்ணிக்கை அதிகரித்தது.  தற்போது நகர் மற்றும் புறநகர் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.    இதுகுறித்து பவானி அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த இரு வாரங்களாக பரவலாகக் காணப்பட்ட காய்ச்சல் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புற பகுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.   கடந்த இரு வாரங்களாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்த நிலையில், தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது மருத்துவர்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Related Stories: