நபார்டு வங்கி மூலம் ரூ.19,448 கோடி கடன்

கோவை,நவ.23: கோவை மாவட்டத்திற்கு அடுத்த நிதி ஆண்டிற்கு நபார்டு வங்கி மூலம் 19 ஆயிரத்து 448 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. கோவை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை வகித்தார். இதன் முதல் பிரதியை ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சேதுராமன் பெற்றார். பின் இது குறித்து கலெக்டர் ஹரிகரன் கூறியதாவது: கடன் பெறும் திட்டத்தை வங்கிகள் முழு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும், கோவை மாவட்டத்தை பொறுத்தவகையில் விவசாயம் மட்டுமின்றி, சிறு,குறு, நடுத்தர தொழில்களும் அதிகம் உள்ளது. மேலும் இவைகளின் வளர்ச்சிக்கு வங்கிகள் உதவி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது.

நடப்பாண்டை காட்டிலும் வரும் நிதி ஆண்டில் நிதி தேவை 6.61 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் மொத்த நிதி ஆற்றல் ரூபாயான 19,446.53 கோடியில் வேளாண் மற்றும் இணை தொழில்களுக்கு 39.55 சதவீதமும், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 42.02 சதவீதமும், இதர தொழில்களுக்கு 18.43 சதவீதமும் இருக்கின்றது. மேலும் நபார்டு வங்கியின் திட்டத்தை அடிப்படையாக கொண்டே வங்கிகளுக்கான கடன் திட்டத்தை முன்னோடி வங்கி தயாரிக்கிறது என தெரிவித்தார். இதில் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் வெங்கட்ராமன், நபார்டு மாவட்ட வளர்ச்சி அதிகாரி வசீகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: