உடனடியாக மின்சாரம் வழங்ககோரி 2 பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

மணப்பாறை, நவ.20: மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் நான்கு நாட்களாக மின்சாரம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக மின்சாரம் வழங்ககோரியும் 2 அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் கஜா புயலால் ஏராளமான மின்கம்பங்கள் உடைந்து விழுந்து சேதமானது. இதனால் கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் விநியோகம் இல்லாமல் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். நான்கு  நாள்ஆகியும் இதுவரை மின்சார வசதி செய்து தராததால் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு மின்சார வசதியும், குடிநீர் வசதியும் உடனடியாக  செய்து  தரக்கோரி மொண்டிப்பட்டி நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மரவனூரை நோக்கி சென்ற அரசு பேருந்தையும், திருச்சியிலிருந்து மணப்பாறை நோக்கி வந்த அரசு பேருந்தையும் சிறை பிடித்து மொண்டிப்பட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இப்போராட்டம் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறைப்பிடித்த இரண்டு பேருந்துகளையும் விடுவித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: