கஜா புயலால் 2 ஆயிரத்து 500 ஏக்கர் மக்காச்சோளம் பாதிப்பு

செம்பட்டி, நவ. 20: செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், வண்ணம்பட்டி, வீரக்கல் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. அறுவடை செய்யும் நிலையில் இருந்த பயிர்கள் அனைத்தும் கஜா புயலால் முற்றிலும் நாசமடைந்தன. குறிப்பாக எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகளின் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இதன் சேத மதிப்பு ரூ.6 கோடி என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட்டுள்ளனர். இந்நிலையில் எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், வண்ணம்பட்டி, வீரக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களை திமுக துணை பொதுசெயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ பார்வையிட்டு, விரைவில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். ஆய்வின்போது ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், அவைத்தலைவர் காணிக்கைசாமி, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி கழக செயலாளர் வாஞ்சிநாதன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர், மல்லையாபுரம் சக்திவேல் உள்பட பலர் இருந்தனர்.

இதேபோல் பழநி அருகே பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் கஜா புயலால் பாதிப்பிற்குள்ளான  மக்காச்சோள பயிர்களை ஐபி. செந்தில்குமார் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘கஜா  புயலுக்கு பழநி, தொப்பம்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள  பயிர்கள் சுமார் 500 ஏக்கர் கடுமையாக சேதமடைந்துள்ளன. அறுவடை நேரத்தில்  ஏற்பட்ட இச்சேதத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். மாவட்ட  நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி உரிய நிவாரணம்  வழங்க வேண்டும். மேலும், பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனை  மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும். மழையால்  சாலையில் தேங்கி உள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே  தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்’’ என்றார்.  ஆய்வின்போது மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றியச் செயலாளர் சௌந்திபாண்டியன், நெசவாளரணி நிர்வாகி காளிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: