பஞ்சப்பட்டி ஒன்றிய பள்ளி மாணவர்கள் செயல்திட்டம் தேசிய அளவில் தேர்வு கலெக்டர் பாராட்டு

தோகைமலை, நவ. 15: தோகைமலை அருகே பஞ்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் செயல் திட்டம் தேசிய அளவில் தேர்வு செய்யப் பட்டுள்ளது.இதற்கு மாணவர்களை கலெக்டர்  பாராட்டினார். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பஞ்சப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் காயத்திரி மற்றும் மணீஸ்வர் ஆகிய 2 மாணவர்கள் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஜெய்குமார் மற்றும் இந்திய சுடர் கல்வி அறக்கட்டளையின் அறிவியல் ஆசிரியர் பெரியசாமி ஆகியோரின் வழிகாட்டுதலுடன் பஞ்சப்பட்டியில் உள்ள  பெரிய ஏரி குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளின் எதிர்காலம் ஏரியையும் அதனால் பயனடையும் விவசாயத்தை நோக்கி என்ற தலைப்பில் செயல் திட்டம் ஒன்றை தயார் செய்தனர். இதனை அடுத்து கடந்த மாதம் கரூர் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல்  இயக்கம் சார்பாக அறிவியல் மாநாடு நடந்தது.

மாவட்ட அளவில் நடந்த இந்த மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தாங்கள் தயார் செய்த சுமார் 500 க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள் (பிராஜக்ட்) போட்டிக்கு வைக்கப்பட்டது. இதில் பஞ்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தயார் செய்த செயல் திட்டங்கள் உள்பட 33 செயல் திட்டங்கள் மட்டும் மாநில அளவிற்கு தேர்வு செய்யப்பட்டது. கடந்த 10 ம் தேதி அன்று கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2018 நடைபெற்றது. இந்த மாநட்டில் மாநில அளவில் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏற்கனவே மாவட்ட அளிவில் தேர்வு செய்யப்பட்ட 33 செயல்திட்டங்களும் போட்டிக்கு வைத்தனர். இந்த போட்டியில் பஞ்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களின் செயல் திட்டம் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டது. வருகிற டிசம்பர் மாதம் ஒடியா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வாpல் 26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2018 நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட பஞ்சப்பட்டி பள்ளி மாணவர்களின் செயல்திட்டம் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தேசிய அளவில் போட்டிக்கு கலந்து கொள்ள உள்ளனர். கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டதில் பஞ்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களின் செயல்திட்டம் தேசிய அளவில் தேர்வு செய்ததற்கு  கலெக்டர் அன்பழகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல், மாவட்ட கல்வி அலுவலர் கபீர், கிருஷணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் அசோகன் உள்பட கிராம பொதுமக்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: