கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 2,609 அரசு பஸ்கள் இயக்கம் கலெக்டர் தகவல் திருவண்ணாமலை

திருவண்ணாமலை, நவ.15: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபதிருவிழாவுக்கு 2,609 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபதிருவிழா நேற்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் நாளான வருகிற 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

இதைக்காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மற்றும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலிருந்தும் வருகிற 22ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 24ம் தேதி (சனிக்கிழமை) வரை திருவண்ணாமலைக்கு 2,609 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் அனைத்தும் இயக்கப்படுகின்றன. அதன்படி, திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், சென்னைக்கு 666 பஸ்களும், அத்தியந்தலில் இருந்து ஓசூர், பெங்களூர், சேலம், திருப்பத்தூர், ஈரோடு, கோவைக்கு 662 பஸ்களும், அண்ணா நுழைவு வாயிலில் இருந்து வேலூர், ஆரணி, செய்யாறுக்கு 336 பஸ்களும், எஸ்.ஆர்.ஜி.டி.எஸ், பள்ளியில் இருந்து சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரத்துக்கு 140 பஸ்களும் இயக்கப்படுகிறது.

இதேபோல், அபயமண்டபத்தில் இருந்து காஞ்சி, மேல்சோழங்குப்பம்் ஆகிய இடங்களுக்கு 20 பஸ்களும், வேட்டவலம் புறவழிச்சாலையில் இருந்து வேட்டவலம், விழுப்புரத்துக்கு 58 பஸ்களும், கம்பன் கல்லூரி எதிரில் உள்ள மைதானத்தில் இருந்து திருக்கோயிலூர், பன்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூருக்கு 242 பஸ்களும், அன்பு நகரில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு 264 பஸ்களும், மணலூர்பேட்டை புறவழிச்சாலையில் இருந்து மணலூர்பேட்டை, திருக்கோயிலூருக்கு 22 பஸ்களும், நல்லவன்பாளையம் புறவழிச்சாலையில் இருந்து தண்டராம்பட்டு, தானிப்பாடி, அரூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்க்ளுக்கு 199 பஸ்களும் ஆக மொத்தம் 2,609 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories: