காவேரிப்பட்டணத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

காவேரிப்பட்டணம், நவ.2:  காவேரிப்பட்டணம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து, பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில், சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்பேத்கர் நகரில் கடந்த 6 மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். நிறம்மாறி கடும் துர்நாற்றம் வீசும் குடிநீரை காய்ச்சி வைத்தாலும், ஆறியதும் மீண்டும் துர்வாடை வீசுவதாக கூறி பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, நேற்று காலை அகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்த தகவலின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அம்பேத்கர் நகர் மட்டுமின்றி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலுமே, கடந்த 6 மாதமாக குடிநீரில் கழிவுகள் கலந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் குடிநீர் எடுக்கும் பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர், அப்படியே குடிநீரில் கலந்து வருகிறது. அதனை சுத்திகரித்து வழங்க வேண்டுமென முறையிட்டும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பல்வேறு இடங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாசு கலந்த குடிநீரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: