ஏமூர் புதூர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து மனு அரவக்குறிச்சி தாலுகாவில் விதிமீறும் கல் குவாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு

கரூர்,அக். 30: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், அரவக்குறிச்சி தாலுகா சாலிபாளையம், ஆண்டிசங்கிலிபாளையம், குளிக்காடு, காளிபாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:

இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள சில கிரஷர் கல் குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி 50 அடி முதல் 100 அடி வரை பூமியில் 1 முதல் 200 துளைகள் (போர் குழிகள்) இட்டு, வெடிமருந்துகளை மொத்தமாக நிரப்பி, ஒரே நேரத்தில் வெடிக்க செய்கின்றனர். இந்த வெடி வெடிக்கும்போது, நில அதிர்வும் ஏற்படுகிறது. இதனால், வீட்டின் சுவர்கள் பாதிக்கப்படுகிறது. அதிகமான வெடிச்சத்தம் கேட்பதாலும் காற்று மாசடைகிறது. மேலும், துர்நாற்றம் காரணமாக, வயது முதிர்ந்தோர், குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்படுகின்றனர். அரசு விதிமுறைகளை மீறி அதிகப்படியான ஆழத்துக்கு கல் வெட்டி எடுத்து வருவதால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணறுகள் வற்றும் நிலை உள்ளது.

எனவே, வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இப்பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். கரூர் காமராஜபுரம் வடக்கு திருநகர் 1வது தெரு பகுதியினர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனுவில், திருநகர் 1வது தெரு மற்றும் திருநகர் மெயின்ரோடு ஆகிய இரண்டு தார்ச்சாலைகளும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட நிலையில் தற்போது, சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. இந்த சாலைகளை புதுப்பித்து தர வலியுறுத்தி பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: