தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அலுவலக ஊழியர் சிக்கினார்

சேலம், அக்.26: சேலம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக அலுவலகத்திற்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், அதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சேலம் கிளை அலுவலகம், 5 ரோடு அருகேயுள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கிளை மேலாளராக பேபி உள்ளார். இந்த அலுவலகத்தின் இமெயிலுக்கு நேற்று முன்தினம் மாலை வந்த 2 மின்னஞ்சலில், ‘‘அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடிக்கும்,’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, அதன் மேலாளர் பேபி, பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய போது, வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. சைபர் கிரைம் பிரவு இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணையில், அந்த அலுவலகத்தின் இமெயிலில் இருந்தே வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டிருப்பது உறுதியானது.

இந்த அலுவலகத்தில் உள்ள 10 கம்ப்யூட்டர்களை, சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மிரட்டல் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மிரட்டல் விடுத்த அன்று அனுப்பப்பட்ட அனைத்து  தகவல்களும் அழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த ஊழியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த ஊழியருக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது மனைவி குழந்தைகளை அழைத்து கொண்டு பிரிந்து சென்று விட்டார். மன அழுத்தத்தில் இருந்த அவர், இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், அதிகாரிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் அதிகாரிகள் சமாதானம் அடைந்துள்ளனர். என்றாலும் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. அவர் உண்மையிலேயே எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார்,’ என்றனர்.

Related Stories: