இபிஎப் கணக்கை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் திருச்சி மண்டல ஆணையரிடம் மனு

திருச்சி, அக்.23: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் இபிஎப் கணக்கை தனியார் ஒப்படைக்கும் முயற்சியை கைவிடக்கோரி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் திருச்சி இபிஎப் அலுவலக மண்டல ஆணையரிடம் மனு கொடுத்தனர். கடலூர் ஏஐடியூசி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் கடலூர் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் தொழிலாளர்கள் திருச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்எல்சியில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் தொடர் சர்வீஸில் நிரந்தர தன்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் இபிஎப் கணக்கை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கி தனது முதலாளி-தொழிலாளி என்ற உறவை என்எல்சி நிர்வாகம் முடித்துக் கொண்டது.

மேலும் கணக்கையும் இரண்டு பிரிவாக வேலையில் சேர்ந்த தேதியில் இருந்து சென்ற ஆண்டு 2017 டிசம்பர் மாதம் ஒரு பகுதியாகவும், 2018 ஜனவரியில் இருந்து மற்றொரு கணக்காவும் பிரித்து விட்டது. இதனால் தொழிலாளர்கள் பெயர் மாற்றம் மற்றும் வயது மாற்றம் கடன், மருத்துவ உதவி பெறுவது, கிராஜுட்டி, பென்ஷன் பெறுவதில் குழப்பமும், பெரும் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இதுகுறித்து தங்கள் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இது சம்பந்தமாக என்எல்சி நிர்வாகமோ, இபிஎப் அலுவலகமோ, தொழிலாளி இடத்திலோ, தொழிற்சங்கங்களுக்கோ எந்த முன் அறிவிப்பும் அளிக்கவில்லை. இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு முன்பு இருந்த நிலைமையை பராமரிக்க வேண்டும். என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: