கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை மனு

திருவள்ளூர், அக். 16:ஆவடி கோயில்பதாகையில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி, அப்பகுதி பெண்கள் 100க்கும் மேற்பட்டோர்  திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சுசீலா கிரேஸி தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வழங்கிய மனுவின் விவரம்:

 ஆவடி நகராட்சி கோயில்பதாகை மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி, காஸ் குடோன் உள்ளது.

இந்த சாலை வழியாகத்தான் பள்ளி மாணவ, மாணவியர்கள், பெண்கள் தினமும் சென்று வருகின்றனர். இங்குள்ள மதுக்கடையில் சரக்கு வாங்கி குடிக்கும் குடிமகன்கள், போதை தலைக்கேறியதும் பெண்களை கிண்டல் செய்வதும், துணி போன இடம் கூட தெரியாமல் விழுந்து கிடப்பதுமாக உள்ளனர். மேலும், கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் நடந்துவருகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகளும் அச்சத்துடன் சென்றுவருகின்றனர். இக்கடையை அகற்ற மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதில், 4 நாட்களுக்குள் மூடுவதாக போலீசார் கூறினர். ஆனால், இதுவரை டாஸ்மாக் மதுக்கடை மூடப்படவில்லை.

கோயில்பதாகை போலீஸ் நிலைய பகுதியில் மட்டும் இரண்டரை கி.மீட்டருக்கும் 10 டாஸ்மாக் கடைகள் உள்ளன. எனவே, டாஸ்மாக் கடையை உடனடியாக மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் உள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: