திருப்போரூரில் பணி முடிந்தும் திறக்கப்படாத உள்விளையாட்டு அரங்கம்

திருப்போரூர், அக்.16: திருப்போரூர் பேரூராட்சி சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன் மார்க்கெட் அருகே இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு முதலில் பிரதான இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட இரும்பு தூண்கள் சாலையோரம் போடப்பட்டு துருப்பிடிக்கத் தொடங்கி உள்ளன. மேலும், அரங்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பணிகள் நடக்காததால் செடி, கொடிகள் முளைத்தது. இதையடுத்து தினகரன் நாளிதழில் இரு முறை செய்தி வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உள் விளையாட்டு அரங்கப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். உடனடியாக பேரூராட்சி  நிர்வாகம் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அளித்து பணியை துரித்தப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கூரை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது.

இன்னும் உள் அரங்கத்தின் தரை அமைக்கும் பணி மட்டும் முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பணி முடிந்தும் உள் விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மேலும், பேரூராட்சி நிர்வாகம் இந்த உள்விளையாட்டு அரங்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: