மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட திருவையாறு பழைய தாலுகா அலுவலகம் இடிந்தது

திருவையாறு, அக். 11:  மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட திருவையாறு பழைய தாலுகா அலுவலகம் நேற்று முன்தினம் இடிநது விழுந்தது. நள்ளிரவில் விபத்து நடந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை  மாவட்டம் திருவையாறு வடக்குவீதியில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது.  அதே கட்டிடத்தில் கிளை சிறைச்சாலை, தாலுகா கருவூலகம் இயங்கி வந்தது.  இந்த கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கட்டிடம் மிகவும்  பழமையாக இருந்ததாலும், தாலுகா அலுவலகத்தின் வளர்ச்சி கருதியும் கடந்த 11  ஆண்டுகளுக்கு முன் தாலுகா அலுவலகம் இந்த கட்டிடத்தில் இருந்து இடமாற்றம்  செய்யப்பட்டு கும்பகோணம் சாலையில் உள்ள புதிய அலுவலகத்துக்கு சென்றது. அதைதொடர்ந்து  இந்த கட்டிடத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின்னர்  அந்த அலுவலகமும் இடமாற்றம் செய்யப்பட்டது. கட்டிடம் நாளுக்குநாள் சேதமடைந்து வந்ததால் கருவூலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. கிளை சிறைச்சாலையே  திருவையாறில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக  இந்த கட்டிடத்தில் எந்த அலுவலகமும் இயங்கவில்லை. அரசும் இந்த கட்டிடத்தை  கண்டுகொள்ளவில்லை. இதனால் கட்டிட சுவர்களில் ஆலமரம், அரசமரம் வளர்ந்து  வேர்விட்டு சுவரில் விரிசல்கள் ஏற்பட்டது. பழைய தாலுகா  அலுவலக கட்டிடத்தின் இருபுறமும் இரு தனியார் மேல்நிலைப்பள்ளிகள்  செயல்படுகிறது. ஒரு பள்ளியில் 2,000 மாணவர்களும், இன்னொரு பள்ளியில்  500க்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர். பாழடைந்த இந்த  கட்டிடம் முன் மாலை 4 மணிக்கே பானிபூரி வியாபாரம் களைகட்டிவிடும்.  மாணவர்கள், பொதுமக்கள் பெருமளவில் அங்கு வந்து நின்று பானிபூரி  சாப்பிடுவர். இந்நிலையில்  நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த தாலுகா அலுவலகத்தின் முன்புற சுவர் திடீரென இடிந்து  விழுந்தது. அப்போது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் காயம்  ஏற்படவில்லை. காலை, மாலை வேளைகளில் இந்த கட்டிடம் இடிந்து  விழுந்திருந்தால் அந்த வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள்  விபத்தில் சிக்கியிருப்பர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு  ஏற்படாமல் கட்டிடம் இடிந்து விழுந்தது.

Related Stories: