நாகர்கோவிலில் தனியார் நிறுவனங்கள், கட்டிடங்களில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்தால் அபராதம் விதிக்கப்படும்: நகர்நல அலுவலர் எச்சரிக்கை

நாகர்கோவில், அக்.10 :  நாகர்கோவிலில் வியாழன்தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும் என்றும், அன்றைய தினம் ஆய்வு செய்து கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நகர் நல அலுவலர் கூறினார். வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. அதன்படி நாகர்கோவில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, பகவதி பெருமாள், ராஜா, ராஜேஷ், ஸ்ரீஜேஸ், ஜாண் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர். இந்த கூட்டத்துக்கு பின், நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் கூறியதாவது : கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையர் உத்தரவின் படி, நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 62 கள பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் 150 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்களது சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சிரட்டை, ஆட்டு உரல், உடைந்த பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளையும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த, தனியார் நிறுவனங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் டெங்கு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய  தினம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் நிறுவன, கட்டிட வளாகத்தை சுற்றி பார்த்து தண்ணீர் தேங்காமலும், குப்பைகள் தேங்காமலும், கொசு புழுக்கள் இல்லாமலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பணியாளர்கள் வாரந்தோறும் ஆய்வு செய்வார்கள். கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்தால் முதல் முறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்படும். 2 வது முறையும் அவ்வாறு இருந்தால், அபராதம் விதிக்கப்படும் என்றார்.

Related Stories: