மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய வீரராகவ பெருமாள் கோயிலில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவள்ளூர், அக். 9: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையான நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். அவர்கள் கோயில் குளத்தில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பெற்றோர் மரணமடைந்த தினத்தில் திதி கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை தினத்தில் திதி கொடுப்பர். பித்ரு பூஜையை கோயில் குளக்கரையில் செய்யலாம். திதி கொடுக்காதவர்களுக்கு மங்களம் உண்டாகாது என்பது ஐதீகம்.நேற்று மகாளய அமாவாசை என்பதால், திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில், முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய, நேற்று முன்தினம் இரவே தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான வர்கள் குவிந்தனர்.இரவில் பக்தர்கள் பிரமாண்டமான அரங்கமான ‘’உடையவர் யாத்ரி நிவாஷ்’’ ல் தங்கினர். நேற்று காலை கோயில் குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் உள்ள புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஏராளமானோர் திதி கொடுத்து, மறைந்த தாய், தந்தையர் மற்றும் முன்னோரை நினைவுகூர்ந்து வழிபட்டனர்.

கோயில் குளக்கரையில் தேங்காய், பூ, பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை வைத்து வழிபட்டு, எள்ளும் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், கோயிலுக்கு சென்று மூலவர் வீரராகவ பெருமாளை  நீண்ட வரிசையில் நின்று 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: