உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு வாக்குரிமை வழங்க வேண்டும்

உடுமலை, அக்.5: உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியின மக்கள் வாக்களிக்க உரிமை வழங்க வேண்டும் என திருமூர்த்திமலையில் நடந்த மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு திருமூர்த்திமலை ருக்மணி மகாலில் சங்க தலைவர் மணி தலைமையில் நேற்று நடந்தது. கமிட்டி உறுப்பினர் மணிகண்டன் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் பேசினார். சங்க செயலாளர் செல்வன் அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜகோபால் பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:திருமூர்த்திமலையில் உள்ள 18 செட்டில்மென்ட் பகுதி மக்களுக்கும் பாரபட்சமின்றி நிலப்பட்டா வழங்க வேண்டும். அப்பர் ஆழியாறில் இருந்து குருமலைக்கு வரும் பாதையை சீரமைக்க வேண்டும். திருமூர்த்திமலை முதல் குருமலை, குழிப்பட்டி பாதை, கொங்குரார்குட்டை, ஈசல்தட்டு, மூணாறு சாலை முதல் தளிஞ்சி, சின்னார் பாதைகளை சீரமைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். திருமூர்த்திமலை 18 செட்டில்மென்ட் பகுதியிலும் மின்வசதி ஏற்படுத்தி தரவேண்டும். திருமூர்த்திமலை கோவில் பகுதியில் பழங்குடியினருக்காக சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும், விவசாயம் செய்வதற்கு பழ மரக்கன்றுகளை வேளாண்மை துறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: