கரூர் மார்க்கெட் பகுதியில் இயங்கும் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம் புதுப்பிக்க மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், செப்.21: கரூர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் வளாகத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் பிறப்பு இறப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.சான்றிதழ்கள் தேவைப்படும் பொதுமக்கள் இந்த அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்து பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, இந்த அலுவலகத்தை புதுப்பித்தும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இங்கு செயல்பட்டு வந்த அலுவலகம், பின்புறம் உள்ள ராஜாஜி சாலையோரம் உள்ள மற்றொரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மார்க்கெட் வளாகத்தில்தான் அலுவலகம் செயல்பட்டு வருகிறது என நினைத்து தினமும் ஏராளமானோர் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.தற்காலிகமாக இந்த அலுவலகம் வேறு இடத்தில் செயல்படுகிறது என்பது குறித்தான அறிவிப்பு ஏதும் வைக்கப்படாததால் பொதுமக்கள் அலைந்து திரிந்து சென்று வருகின்றனர்.எனவே, புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தின் முன்பாக அறிவிப்பு பலவை வைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், கட்டுமான பணிகளை விரைந்து முடித்து இதே பகுதியில் பிறப்பு இறப்பு அலுவலகம் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை துரித கதியில் செய்திட வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: