பாக்கெட் தண்ணீரால் பரவுது நோய் : உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா?

பழநி, செப். 18: பழநி நகரில் சுகாதாரமற்ற பாக்கெட் தண்ணீர் விற்பனையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இவற்றின் உற்பத்தி, விற்பனையை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பழநி கோயிலில் ஆண்டு முழுவதும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக ஏராளமான இடங்களில் தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அக்கடைகளில் பக்தர்கள் பயன்படுத்தும் அடிப்படை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.அவற்றில் ஒன்று பாக்கெட் தண்ணீர். இவற்றில் பெரும்பாலானவை முறையான அனுமதி பெறாமல் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பாக்கெட் தண்ணீராகவே உள்ளன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட தேதிக்கான இடம் பூர்த்தி செய்யப்படாமல் எப்போதும் காலியாகவே உள்ளதால், இதன் உற்பத்தி காலத்தை அரிய முடிவதில்லை. ஒரு பாக்கெட் ரூபாய் 3க்கு விற்பனை செய்யப்படுவதால் பக்தர்களும் பாட்டில் தண்ணீருக்கு பதிலாக பாக்கெட் தண்ணீரையே அதிகளவு பயன்படுத்துகின்றனர்.

இதுபோன்ற சுகாதாரமற்ற குடிநீரை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,

சளி, இருமல், காய்ச்சலில் தொடங்கி சிக்குன்குனியா, டையேரியா முதல் மஞ்சள்காமாலை வரை நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்று தயாரிக்கப்படும் குடிநீரானது உரிய சுகாதார முறைப்படி தயாரிக்கப்படுவது இல்லை. கிணற்றுநீர், ஆற்றுநீர் மற்றும் போர்வெல் தண்ணீரை பாக்கெட் செய்து விற்பனைக்கு கொண்டு வந்து விடுகின்றனர். இவ்வாறு தயார் செய்யப்படும் பாக்கெட்டுகள் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே தயாரிக்கப்பட்டு இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுவதாலும், சுத்திகரிக்கப்படாததாலும் நோய் தாக்குவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எனவே உணவுத்துறை அதிகாரிகள் சுகாதாரமில்லாத பாக்கெட் தண்ணீரை தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: