தமிழகத்தில் முதல் முறையாக நெல்லையில் அறிமுகம் பொது இ சேவை மையங்களை அறிய ‘புதிய செயலி'

நெல்லை, செப். 18: பொது இ சேவை மையங்களை அறிந்து கொள்ள புதிய செயலியை தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையில் கலெக்டர் ஷில்பா அறிமுகப்படுத்தியுள்ளார்.நெல்லை மாவட்டத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் 26,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் 155, கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினுடைய 7, மகளிர் திட்டத்தின் கீழ் 174 மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மூலமாக 21 என மொத்தமாக 383 பொது  சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த சேவை மையங்களின் இருப்பிடம் பொது மக்களுக்குத் தெரியாததால் வீணாக அலைய வேண்டியுள்ளது.     பொது மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பொது சேவை மையத்தின் இருப்பிட விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ள தேசிய தகவலியல் மையத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ”CSCNellai” என்ற  செயலியை மாநிலத்திலேயே முதன்முதலாக நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி சேவையை நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

Google Play Store-லிருந்து ”CSCNellai” என்ற மொபைல் போன் ஆப் என்ற செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வேண்டும். இதன் மூலம் 1 கி.மீ., 5 கி.மீ, 10 கி.மீ., 15 கி.மீ, 20 கி.மீ., 30 கி.மீ ஆகிய 6 வகையான சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து பொது சேவை மையங்களின் இருப்பிடங்களையும் அவரவர் கைபேசியில் பார்த்துக் கொள்ளலாம்.

தாங்கள் விரும்பும் மையத்தின் குறியீட்டின் மேல் அழுத்தினால் அதனுடைய முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், தங்கள் இருப்பிடத்திலிருந்து உத்தேச தூரம் ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். தொலை பேசி எண்ணின் மீது அழுத்தினால் நேரடியாக அந்த மையத்தின் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை ஆர்டிஒ மைதிலி, பிஆர்ஓ செந்தில், தேசிய தகவலியல் மைய முதுநிலை இயக்குநர் தேவராஜன், இயக்குநர் ஆறுமுகநயினார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: