நல்லூரில் சிறப்பு வேளாண் கண்காட்சி

கொள்ளிடம்,ஆக.14: கொள்ளிடம் அருகே நல்லூரில் சிறப்பு வேளாண் கண்காட்சி  மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது,

அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்புல மாணவிகள் (குழு எண் ஜி-11) கிராமத்தில் தங்கி பயிற்சிபெறும் திட்டத்தின்கீழ்  கொள்ளிடம் அருகே நல்லூர் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இயற்கை வேளாண்மையின் அவசியம், புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவ்வகையில் வேளாண்மை குறித்த சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தினர். நல்லூர் உத்திராபதியார் மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியை  அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், வீட்டு தோட்டம், ஒருங்கிணைந்த பண்ணை, பஞ்சகவ்யா, அமிர்தகரைசல், மண்புழு உரம் ஆகிய இயற்கை வேளாண்மைக்கு உதவும் பொருட்கள் தயாரிப்பு முறைகளும், பயிர்களை தாக்கும் பூச்சிகள், நோய்கள், அவற்றிற்கான மருந்துகள் உட்பட விவசாயம் குறித்த அனைத்து விபரங்களும் இடம் பெற்றிருந்தன. பின்னர் திருமண மண்டபத்தில்  நடைபெற்ற கருத்தரங்கில் பணங்காட்டாங்குடி ஒருங்கிணைந்த பண்ணை முன்னோடி இயற்கை விவசாயி வீராசாமி பங்கேற்று இயற்கை விவசாயம் குறித்து உரையாற்றினார். விவசாயிகள், மாணவிகளின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.இதில் முன்னாள்  ஊராட்சிமன்ற தலைவர் ஆனந்த நடராஜன், பெருநிலக்கிழார் பாஸ்கரன், நாட்டாமை ஜெயராமன், ஓய்வு ஆசிரியர் சுப்ரமணியன், வழக்கறிஞர் வீதிவிடங்கன், ஆசிரியர் கோவிந்தராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவி கலைவாணி அனைவரையும் வரவேற்று பேசினார். மாணவி கனிமொழி நன்றி கூறினார்.

Related Stories: