தரங்கம்பாடி அருகே ஓராண்டாக உடைந்து கிடக்கும் அடிகுழாய் குடிநீரின்றி மக்கள் தவிப்பு

தரங்கம்பாடி, ஆக.13:  தரங்கம்பாடி அருகே ஊராட்சிக்கு சொந்தமாக அடிகுழாய் ஓராண்டாக உடைந்து கிடப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தரங்கம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காழியப்பநல்லூரில் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக அடிகுழாய் ஒன்று இருந்தது. அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அதை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஓராண்டாக உடைந்து கிடக்கும் அந்த அடிகுழாயை ஊராட்சி நிர்வாகம் பழுது பார்க்கவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவர் கூறுகையில், இந்த அடிகுழாய் மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீரை பெற்று வந்தனர்.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதாலும், நிழல் தரும் மரங்கள் அதிகம் உள்ளதாலும் திருநள்ளார், வேளாங்கண்ணி, நாகூருக்கு கார்களில் செல்லும் பயணிகள் இங்கே அமர்ந்து சாப்பிடவும், இந்த குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்த அடிகுழாய் ஓராண்டாக உடைந்து கிடப்பதால் தண்ணீர் வருவதில்லை.ஊராட்சிகளில் மக்கள் பிரநிதிகள் இல்லாததால் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இங்கு 20 அடி ஆழத்திலேயே நல்ல குடிநீர் கிடைக்கும். எனவே உள்ளாட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த அடிகுழாயை பழுது நீக்கி சரி செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: