6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை பெற திறனாய்வு தேர்வு

தூத்துக்குடி, ஆக. 13: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பு  வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு திறனாய்வுத் தேர்வு நடத்தி மத்திய அரசின் கல்வி உதவித்தொகை  வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி தபால் கோட்ட தலைமை கண்காணிப்பாளர் அலுவலகம் வௌியிட்ட  செய்திக்குறிப்பு: தூத்துக்குடி  மாவட்ட தபால் அலுவலகத்தில் ரூ.300 செலுத்தி தபால் தலைசேகரிப்பு கணக்கு  துவங்கிய மாணவ,மாணவிகளுக்கு தபால் துறை சார்பில் தீனதயாள் ஸ்பார்ஷ்  யோஜனா என்ற கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதன்படி தபால் தலை சேகரிப்பு கணக்கு துவங்கிய 6 முதல்  9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தபால்துறை சார்பில்  திறனாய்வு தேர்வு நடத்தி இதில் வெற்றிபெறுவோருக்கு மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை கல்வி  உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 எனவே, தபால்தலை சேகரிப்பு கணக்கு  துவங்கியுள்ள மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கான திறனாய்வு தேர்வு  எழுத விண்ணப்பிக்கலாம். தபால் தலை சேகரிப்பு கணக்கு இல்லாதவர்கள், புதிதாக  ரூ.300 தலைமை தபால் அலுவலகத்தில் செலுத்தி புதிய கணக்கு  துவங்கியும்  உதவித்தொகைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு வரும் 16ம் தேதிக்குகள் மதுரை தென்மண்டலம், கோவை மேற்கு மண்டலம், சென்னை  மண்டலம், திருச்சி மத்திய மண்டலம் தபால்துறை இயக்குநர் அலுவலகங்களுக்கு  அனுப்பிவைக்க வேண்டும். தபால் உறையில் தீனதயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்று  எழுதப்பட வேண்டும். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: