கைக்குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்டவர் வறுமையை வென்று எஸ்ஐ ஆன இளம்பெண்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கை குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். நடிகர் மோகன்லால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் அருகே காஞ்சிரம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆனிசிவா (31). பள்ளி படிப்பை முடித்தவர். அங்குள்ள கல்லூரியில் இளங்கலை சோஷியாலஜி படித்தார். முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு காதல் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2009ல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 6 மாதத்தில் கணவர் பிரிந்து சென்று விட்டார். கணவன் கைவிட்டதால் ஆனிசிவா கை குழந்தையுடன் தவித்தார். தொடர்ந்து குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பெற்றோர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.இதையடுத்து அருகில் ஒரு ஓலை குடிசையில் வசிக்கும் பாட்டியிடம் தஞ்சமடைந்தார். குடிசையில் கைக்குழந்தையுடன் வாழ்க்கையை தொடங்கினார். வறுமை என்றாலும் தொடர்ந்து படித்தார். குழந்தையை வளர்ப்பதற்காகவும், படிப்பு செலவுக்காகவும் விழாக்களில் ஐஸ் கிரீம் விற்பது, இன்சூரன்ஸ் ஏஜென்டாக பணி புரிவது, அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பது ேபான்ற வேலைகள் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தார். கல்லூரி படிப்பை முடித்தார். அவருக்கு தோழி ஒருவர் ஆதரவாக இருந்தார். எப்படியாவது அரசு வேலை பெற்றுவிட வேண்டும் என்று தோழி ஊக்கம் கொடுத்தார். இதனால் போட்டி தேர்வுகளில் கவனம் செலுத்த தொடங்கினார். 2016ல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்ற ஆனிசிவாவுக்கு கொச்சியில் நடக்கும் பயிற்சியில் சேர அழைப்பு வந்தது. இதனால் தனது மகனை அழைத்து கொண்டு கொச்சி சென்றார். மகனை அங்குள்ள பள்ளியில் சேர்த்து விட்டு பயிற்சிக்கு சென்று வந்தார். சப்- இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்த அவருக்கு தனது சொந்த ஊரான வர்க்கலா காவல் நிலையத்தில் பணி நியமனம் கிடைத்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இதற்கிடையே தன்னுடைய மகன் கொச்சியில் படித்து வருவதால் எர்ணாகுளத்துக்கு இடமாறுதல் கேட்டு டிஜிபி லோக்நாத் பெஹ்ராவிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று எர்ணாகுளத்துக்கு இடமாறுதல் வழங்கி டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி இன்று எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி ஏற்க உள்ளார்.ஆனிசிவா குறித்த விவரங்களை அறிந்த நடிகர் மோகன்லால் தனது பேஸ்புக்கில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனிசிவாவின் வாழ்க்கை கதையை பெண்கள் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்….

The post கைக்குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்டவர் வறுமையை வென்று எஸ்ஐ ஆன இளம்பெண் appeared first on Dinakaran.

Related Stories: