நன்றி குங்குமம் டாக்டர்
நம் உடலில் உள்ள சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் சிறுநீரகம் பிரதானமானது. நாள் தோறும் நம் உடலில் சேரும் நச்சுக்களையும் தேவையற்ற கழிவுகளையும் உடலிலிருந்து வெளியேற்றி என்றும் ஆரோக்கியமாய் இருக்கச் செய்ய உதவும் அற்புதம் சிறுநீரகம். ஆனால், இன்று சிறுநீரகப் பிரச்சனை என்பது மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. நாம் அவ்வப்போது கேள்விப்படும் நோய்களில் மிக முக்கியமான ஒன்று சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயிலிர்).
சிறுநீரக செயலிழப்புக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள தவறினால், அது மரணத்தில் கொண்டுவிட்டுவிடும் அபாயமும் உண்டு. ஆகவே, சிறுநீரக செயலிழப்பு குறித்து ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியமாகும். அந்தவகையில், சிறுநீரக செயலிழப்பு குறித்தும், அதன்பாதிப்புகள், தீர்வுகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டி.எஸ். ஹர்சவர்தன்.
சிறுநீரக செயலிழப்பு என்பது என்ன?நமக்கு இரண்டு கண்கள், இரண்டு காதுகள் உள்ளது போல நமது உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இந்த சிறுநீரகங்கள் நாம் இந்த பூமியில் பிறந்த நிமிடம் முதல் அதன் பணியைத் தொடங்குகின்றன. அதாவது நமது உடலில் தினமும் உற்பத்தியாகும் கழிவுப் பொருட்களை வெளியேத் தள்ளி சிறுநீரகத்தை சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் சில சமயம் ஏதாவது காரணத்தால் இரண்டு சிறுநீரகங்களுமே பழுதுபட்டு அதன் வேலையை செய்யமுடியாமல் போவதைத்தான் சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயிலியர்) என்று கூறப்படுகிறது. இது சில நாட்களாக, சில வாரங்களாக தொடர்கிறது என்றால் அக்யூட் கிட்னி இன்ஜுயூரி என்று சொல்லப்படுகிறது.
சிறுநீரக செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது?சிறுநீரக செயலிழப்பு ஏற்பட நோய் தொற்றே முதன்மையான காரணம். அதாவது கிருமி தாக்குதல். அது சிறுநீரக தொற்றாக இருக்கலாம். சிறுநீர் தொற்றாக இருக்கலாம். தோலில் சீழ் கட்டியாக இருக்கலாம். நுரையீரலை பாதிக்கும் நிமோனியா ஜுரமாக இருக்கலாம். இதுபோன்ற நோய் தொற்று ஏற்படும்போது ஆரம்பத்திலேயே கவனிக்காமல் அலட்சியமாக இருந்தால், நாளடைவில் அவை, ரத்தத்தில் கலந்து கிட்னி வரை போய் கிட்னியை தாக்கலாம். இதுதான் பெரும்பாலும் நிகழ்கிறது. அடுத்தபடியாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து வலி கொல்லி மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மூட்டுவலி, உடல் வலி போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையில்லாமல் பார்மஸியில் சென்று மாத்திரை வாங்கி போட்டுக் கொள்வது. சில வகையான நாட்டுமருந்துகளை உட்கொள்வது, கிட்னியில் கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு சிறுநீரக செயலிழப்பு வரலாம்.மூன்றாவதாக பிரசவகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளாலும் கிட்னி பெயிலியர் ஆகலாம். நாலாவது, சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளாலும் கிட்னி பெயிலியர் ஆகலாம். இதைத்தவிர, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதது, ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு, வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், வயலில் வேலை செய்பவர்கள், தண்ணீர் அதிகம் குடிக்காமல் டி ஹைட்ரேஷன் ஆகும்போதும் கிட்னி பாதிக்கலாம். அதுபோன்று தொடர்ந்து நிக்காமல் பேதியாகி கொண்டிருந்தால் உடலில் உள்ள நீர் வற்றி கிட்னி பெயிலியர் ஆகலாம். கிட்னியில் கல், கிட்னி பகுதியில் கல்லடைப்பு, கிட்னி பகுதியில் கேன்சர் வருவது போன்றவற்றினாலும் கிட்னி செயலிழப்பு ஏற்படலாம்.
சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் என்னென்ன?சிறுநீரக செயலிழப்பை பொருத்தவரை ஆரம்பகட்டத்தில் எந்தவித அறிகுறியும் தெரியாது. இதனாலேயே, பெரும்பாலானவர்கள் சற்று தீவிர நிலையிலேயே வருவார்கள். அறிகுறிகள் என்றால், சிறுநீர் வழக்கத்தைவிட குறைவாக போகுதல், சிறுநீர் போகும்போது எரிச்சல் இருப்பது. சிறுநீர் கழிப்பதே குறைந்துவிடுவது, சிறிது நேரம் கால் தொங்கப்போட்டு உட்காரும்போது வீங்குவது, மூச்சிறைப்பு, கண்களை சுற்றி வீக்கம், முகம் ஊதி போவது இதைத்தவிர, சிறுநீரில் ரத்தம் கலந்து போவது. அல்லது சிறுநீர் காபி நிறத்தில் போவது, சோர்வு போன்றவை எல்லாம் சிறுநீரக செயழலிப்புக்கான அறிகுறிகளாகும் சிகிச்சைகள்!பெரும்பாலும் நோயாளிகள் அக்யூட் கிட்னி இன்ஜுயூரி கட்டத்தில்தான் வருவார்கள். அப்படி வந்ததும் அவர்களுக்கு எதனால் கிட்னி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிப்போம். உதாரணமாக ஒருவர் வெகுநாட்களாக வலி கொல்லி மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தால் முதலில் அதை நிறுத்துவோம். அடுத்து தொற்றாக இருந்தால் என்ன வகை தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கு தகுந்த மருந்துகளை வழங்குவோம். சற்று தீவிரமாக இருந்தால் அவர்களுக்கு பயாப்ஸி செய்து பார்த்துவிட்டு அதற்கு தகுந்த சிகிச்சைகளை தொடருவோம். இதைத்தவிர, முற்றிய நிலையில் இருந்தால், சிறுநீரே வரவில்லை என்றால் அவர்களுக்கு டயாலிஸிஸ் அறிவுறுத்துவோம். இந்த டயாலிசிஸ் மூலம் சிறுநீரகத்தின் வேலையை மிஷின் மூலம் செய்ய முயற்சி செய்வோம். இந்த டயாலிசிஸில் மூன்று வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அவை, ஹீமோடயாலிசிஸ் (HEMODIALYSIS) எனப்படும் செயற்கை சிறுநீரக இயந்திரம் மூலம் ரத்தத்தை வெளியே எடுத்து சுத்தம் செய்து மீண்டும் உள்ளே செலுத்துதல். இதை வாரம் 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும். பெரிடோனியல் டயாலிசிஸ் (CONTINUOUS AMBULATORY PERITONEAL DIALYSIS-CAPD) எனப்படும் வயிற்றினுள் ஒரு குழாய் மூலம் சுத்திகரிப்பு திரவத்தை செலுத்தி வைத்திருந்து சில மணி நேரம் கழித்து வெளியே எடுத்தல். இதை தினம் 4-5 முறை செய்ய வேண்டும். இதனை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.கடைசிகட்டமாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (KIDNEY TRANSPLANTATION) சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மிக சிறந்ததாகும். நோயாளிக்கு உடல் தகுதியாக இருந்து அவருக்கு பொருந்தும் ரத்த வகையில் உள்ள அவரது உறவினர் அல்லது விபத்தில் இறந்த நபரின் உறவினர்கள் மனமுவந்து சிறுநீரக தானம் தர முன் வந்தால் இவருக்கு ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்து பொறுத்துவதன் மூலம் மீண்டும் பழைய முழு ஆரோக்யமான நிலைக்கு இவரை கொண்டு வர முடியும்.
ஒருவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் வரை சென்று விட்டால், அவர்களை காப்பாற்றுவது கடினமா?
இந்த சூழ்நிலை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அப்போது டயாலிசிஸ் வசதிகள் அவ்வளவாக நம்மிடம் இல்லாத நேரம். இதனால், முற்றிய நிலையில் வருபவர்களை காப்பாற்ற முடியாமல் போனது. ஆனால், இப்போது அப்படியில்லை, சரியான நேரத்தில் ஒருவர் வந்துவிட்டால், 80- 90 சதவிகிதம் காப்பாற்றிவிடலாம். தற்போது, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை எல்லாவற்றிலுமே அதற்கான நவீன வசதிகள் எல்லாம் வந்துவிட்டது. ஆனால், அதையும் மீறி சிலர், மிகவும் முற்றிய நிலையில் வரும்போது அவர்களுக்கு நச்சுகளின் தொற்று, இதயத்தையோ அல்லது மூளைவரை சென்றடைந்துவிட்டால்தான் காப்பாற்றுவது கடினம். இதில் முக்கியமாக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. டயாலிசிஸ் என்றதும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. டயாலிஸிஸ் சிறுநீரக பிரச்னை ஏற்பட்டவர்களுக்கு புது வாழ்க்கை கொடுக்கும் வரப்பிரசாதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அக்யூட் கிட்னி இன்ஜுயூரி ஏற்பட்டவர்களுக்கு, உடனடியாக ஆபத்தில் இருந்து விடுவிக்க 2 வாரமோ, 3 வாரமோ 6 வாரமோ டயாலிசிஸ் செய்தால் போதுமானது. பின்னர், தொடர் சிகிச்சையின் காரணமாக அவர்களுக்கு மெல்ல மெல்ல சிறுநீரகம் செயல்பட தொடங்கிவிடும். பின்னர் அவர்களுக்கு டயாலிசிஸ் தேவையில்லை. ஒரு சிலருக்கு சிறுநீரக கோளாறு தீவிரமாக இருந்து அவர்களது கிட்னியை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும்போதுதான் அவர்கள் வாழும் காலம் வரை டயாலிஸிஸ் தேவைப்படும். அவர்களுக்குதான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
தற்காத்துக் கொள்ளும் முறைகள்முதலில் மக்களுக்கு சிறுநீரக செயலிழப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மக்கள் இதைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் (முக்கியமாக சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்), ரத்த கொதிப்பு உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள் அவ்வப்போது, முறையான மருத்துவ ஆலோசனைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜுரம், மூட்டுவலி போன்றவற்றிற்கு நாமே பார்மஸி சென்று மாத்திரைகள் வாங்கி போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவரை சந்தித்து பாதுகாப்பான மருந்து மாத்திரைகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எப்போதும் உடலை நீர் பதமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அது எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சற்று வயது கூடியதும் ரெகுலராக மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் நம்மை சிறுநீரக செயலிழப்பு மட்டுமல்லாமல் மற்ற நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளும் வழிகளாகும்.
தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்