நன்றி குங்குமம் தோழி
இந்த கட்டுரைத் தொகுப்பை எழுதிய ஆனந்த் மனநல ஆலோசகராகவும், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளராகவும் செயல்படுபவர். புத்தகத்தில் தன்னைப் பற்றி அறிதல் என்ற நோக்கில் ‘யாரிடம் பேசலாம்’ என்று இவர் யோசித்த விதம்தான் புத்தகத்தின் ஆகச்சிறந்த விஷயமாக இருக்கிறது.அதாவது, புராண இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதக் கதைகள் நாம் அறிந்த ஒன்றே. அதிலிருக்கும் திருதராஷ்டிரன், வியாசர் மற்றும் தென்னவர் போன்ற கதை மாந்தர்களுடன் இன்றைய மனிதன் உரையாடுவது போன்ற விதத்தில் கட்டுரைகளை அவர் இதில் கையாண்டிருப்பார்.
திரைப்படம் ஒன்றின் துவக்கத்தில் ஹீரோவை அறிமுகப்படுத்தும் காட்சியில், கூடவே இருக்கும் ஒருவர், ‘‘ஹீரோ யார் தெரியுமா? அவர் பேரைச் சொன்னாலே பூமி அதிரும்… அண்டம் குலுங்கும்… ஆகாசம் முழங்கும்’’ போன்ற வார்த்தைகளை பிரயோகித்து ஹீரோவின் குணாதிசயங்களை பார்வையாளரிடம் பிரமிக்க வைப்பார். அதுபோலத்தான், வெகுஜன மக்களும், ‘‘நான் யார் தெரியுமா?
என் பெயரை எத்தனை செல்வாக்குடன் வைத்திருக்கிறேன் தெரியுமா? எனது பெயர்தான் என் வியாபாரத்தின் அடையாளம் தெரியுமா?’’ என்றெல்லாம் பில்டப் செய்வதைக் கேட்டிருக்கிறோம்.
இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் முதலில் உடைப்பது பெயரைப் பற்றிய கேள்விதான். பெயரில் என்ன இருக்கிறது? அதுவொரு அடையாளம் மட்டுமே. அந்த அடையாளத்தில் நமக்குள் இருக்கும் உண்மையை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்கிறார். ஏனென்றால், நம் பெயரை மட்டும் வைத்து நாம் நமது பார்வையை மாற்றுகிறோம்.
காலத்தின் நிகழ்வை மாற்றுகிறோம். உதாரணத்திற்கு, ‘‘அந்தக் காலத்தில் நான் பள்ளியில் முதல் மாணவனாக இருந்தேன். கடந்த காலத்தில், என்னோட பெயரை நிறுவனத்தில் தக்க வைப்பதற்காக பலவிதங்களில் நான் போட்டியிட்டுக் கொண்டிருந்தேன்’’ என்றெல்லாம் பேசுவதை கேட்டிருப்போம். அதனால்தான் நாம் நம் பெயரில் இருக்கும் அடையாளத்தை வைத்து நம்முடைய நிகழ் காலத்தையும், அதிலிருக்கும் உண்மையையும் பார்க்கத் தவறி விடுகிறோம் எனக் கூறுகிறார்.
நாம் நமது வாழ்க்கையை பார்க்கும் பார்வைக்கும், நாம் பார்க்கும் காட்சிக்கும் மிகப்பெரிய தொடர்பிருக்கிறது. நமது பார்வையில் தெளிவு இல்லையெனில், நாம் பார்க்கும் காட்சிகளிலும் தெளிவு இருக்காது. அதனால்தான் தெளிவான புரிதல் மனிதர்களின் மீது ஏற்படாது தவிக்கிறோம் என்கிறார் இவர்.இப்படியாகப் புரிதலில் தடுமாற முக்கியக் காரணமாய் மொழியும், பழக்கவழக்கங்களும் இருக்க, காலத்தின் முன் எதுவும் இங்கே மாறவில்லை. ஆனால், நம்முடைய உரையாடல்களை வைத்து அனைத்தும் மாறிவிட்டது என்று நாம் நினைத்து, சக மனிதர்களை ஒதுக்கி வைப்பதும், அரவணைத்துக் கொள்வதும் இயல்பாகிவிட்டது.
அதனால்தான் நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த உலகம் அதன் இயக்கத்திலும், உறவுகள் அதன் தன்மையிலும் வாழ்ந்து கொண்டே… தங்களை நகர்த்திக் கொண்டே இருப்பார்கள் என்கிற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.இந்த விவாதத்தில் வாழ்க்கையை ஏன் முன் வைக்கிறோம் என்றால், புரிதலைப் பற்றிய தெளிவு முதலில் நமக்கு இல்லை என்பதால். இங்கு புரிதல் என்பதற்கு ஒரு வரையறை வைக்கிறார் எழுத்தாளர். அதாவது, மேல்மனப் புரிதல் மற்றும் ஆழ்மனப் புரிதல் என இரண்டாய் புரிதலை அவர் பிரிக்கிறார்.
மேல்மனப் புரிதல் என்பது நாம் பேசும் சொற்களையும், கருத்துக்களையும் மட்டுமே உள்வாங்குவதாகும். இந்தப் புரிதல் முக்கியம்தான். ஆனால், ஆழ்மனப் புரிதல் உருவாகும் போது, வாழ்வியலின் அனுபவங்களையும், நம் முன்னோடிகளின் வாழ்க்கையையும் ஆராய்ந்தே தெளிவான முடிவுக்கு வரமுடியும் என்கிறார்.ஆழ்மனப் புரிதல் ஏற்படும் போதே, ‘நான்’ என்ற உணர்வு எதுவாக இருந்தாலும், அதைப் பற்றிய அலட்டல் நமக்கு ஏற்படாது. இந்த ‘நான்’ என்கிற உணர்வு ஏழையாக இருந்து பணக்காரன் ஆகலாம். படிக்காமல் இருந்து தலைவன் ஆகலாம். இப்படியாக எதுவும் இதில் நடக்கலாம். இவை எல்லாமே சமூகத்தில் நடக்கின்ற ஒன்றுதான். அதாவது, நாம் எதையெல்லாம் பெரிய விஷயம் அல்லது வாழ்க்கையை வாழ்வதற்கு முக்கியம் என்கிறோமோ, அதையெல்லாம் மிகச் சாதாரணம் என்கிற உணர்வை ஏற்படுத்த நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
இங்கு நமக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் மனிதன் ஒரு சமூகப்பிராணி என்றே. இதில் சமூகம் என்பதே நமக்குள் இருக்கும் ஒரு பாகம்தான். சமூகத்தால் நமக்கு கிடைக்கும் அங்கீகாரம், உறவுகள், நட்புகள், பொருளாதாரம் அனைத்திலும், ஒரு அடையாளமாய் நாமும் இருப்போம். இந்த அடையாளத்தையே சுய அடையாளமாய் மாற்றியும் விடுகிறோம். இந்த இரண்டு அடையாளமும் சேரும் போது, ஒரு உண்மையை கவனிக்க மறந்து விடுகிறோம்.
நமது உடலும், மனமும் ஆரோக்கியமாக செயல்பட இந்த ‘நான்’ என்ற உணர்வை தள்ளி வைத்து இயங்க வேண்டும் என்பதே நிதர்சனம். காலம் இதை மாற்றினாலும், நமக்குள் இருக்கும் தெளிவை வைத்து, காலத்தின் முன் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை இந்த புத்தகத்தின் வழியாக உணரவும் முடிகிறது.ஒரு விஷயத்தை செய்ய முற்படும்போது, நம் இனத்தில், நம் குழுவில், நம் பாரம்பரியத்தில் இது போல் செய்யக் கூடாது, செய்ய வேண்டும் என்ற பொது அனுபவத்தை காலம் காலமாக நம் மீது திணித்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் நம் அனுபவத்தையும், பொது அனுபவத்தையும் தனியாக பிரித்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறோம். இங்கு பொது அனுபவம் என்பதே பொய் என்பதாகும். ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆள். அப்படியிருக்கும் போது, ஒவ்வொரு மனிதனின் அனுபவமும் தனித்தனியே.
இதனால்தான் சிந்தனையை விரிவாக்க வேண்டும் என்கிறார்கள். சிந்தனையின் எல்லை என்பது அனுபவத்தால், படிப்பால், கேள்வி ஞானத்தால், மனதின் அடியிலிருந்து உருவாகும் கருத்தால் என, பலவிதத்தில் நாம் விரிவுபடுத்தும் போது பொது அனுபவங்களின் வழியே நம்மை நாம் ஏமாற்ற தேவையில்லை.உதாரணத்திற்கு, காலத்தைப் பற்றி எத்தனையோ கருத்துக்கள் கூறுகிறார்கள். காலத்தை வைத்து எத்தனை புராணக் கதைகள், எத்தனை இதிகாசக் கதைகள், எத்தனை விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
காலம் என்பது என்ன? இதிலிருக்கும் பொது அனுபவக் கருத்தை வைத்து, நாம் நமது பார்வையில் காலத்தைப் பற்றிய தனி அனுபவத்தை எப்படிக் கூற முடியும்? இந்த வித்தியாசம் முதலில் நமக்கு புரிய வேண்டும். இப்படியாக இந்தப் புத்தகம் நம் அறிவை, நம் சிந்தனையை, நம் அனுபவத்தை, நம் நினைவை, நம்மையே திரும்பிப் பார்க்க வைக்கிறது.இங்கு முன்னேற்றக் கதைகள் சார்ந்து பல நூல்கள் வருகிறது. ஆனால், மனிதர்கள் நிதானமாக இருப்பதற்கு தேவையான புத்தகங்கள் குறைவாகவே இருக்கிறது. இந்தப் புத்தகம் அந்தத் தேடலை பூர்த்தி செய்கிறது.
காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்
